3713. எண்ணிற வரிவளை நெறிகுழ லெழின்மொழி
       யிளமுலைப்
பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விட
     மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர்
     கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி
     மிழலையே.                          2

     2. பொ-ரை: சிவபெருமான், எண்ணற்ற வரிகளையுடைய
வளையல்களையும், சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும்,
இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு
பாகமாகக் கொண்டவர். பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட
கண்டத்தினர். நெற்றிக் கண்ணையுடையவர். விரைந்து நடக்கும்
இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கையினர்.
விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பண் - பாராட்டற்குரிய, நிறம் - நிறம்பொருந்திய, வரி
- கீற்றுக்களையுடைய. வளை - வளையல்களையும், நெறி - தழைத்த,
குழல் - கூந்தலையும், எழில்மொழி - அழகிய மொழியையும் உடைய.
பெண் - உமாதேவியார். உறும் - பொருந்திய உடலினர். கடல் விடம் - கடலில் எழுந்த விடம் பொருந்திய, மிடறினர் -
கண்டத்தையுடையவர். கண் உறும் நுதலினர் - நெற்றி
விழியையுடையவர். கடியது - விரைந்து நடப்பதாகிய ஓர் விடையினர். கனலினர் - (கையிலேந்திய) நெருப்பையுடையவர். விண்உறு(ம்) பிறை
அணி சடையினர் பதி வீழிமிழலை.