3715. செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர்
       செறிதரு
கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர்
     தொழுவிலா
முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர
     முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி
     மிழலையே.                          4

    4. பொ-ரை: சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற
மேனியுடையவர். நெருப்புப் போன்று விடமுடைய, கவ்வும்
தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர்.
சுடர் விடும் மழுப்படை உடையவர். தம்மைத் தொழாத,
பகைமையுடைய,
சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை
அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும்
கோபித்தவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது
திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: செவ் அழல் - செந்நெருப்பு. என - என்னும்படி.
நனிபெருகிய - மிகவும் பெருகிய, உருவினர். செறி - அரையில்
கட்டிய. கவ்வு - கவ்விக்கடிக்கும். அழல் - விடத்தையுடைய
(அரவினர்) கதிர் முதிர் - ஒளிமிக்க (மழுவினர்). அழல் நிசிசரர் -
கோபத்தையுடைய அசுரர். அழல் - கோபம், சினமென்னுஞ்
சேர்ந்தாரைக் கொல்லி" என வள்ளுவரும் உருவகித்தார். (குறள். 306) (மூன்று + அழல் = முவ்வழல்) விறல் சுவை - வலிமைகள், அழிதர -
அழியவும். மும்மதில் - திரிபுரம் (வெம்மை + அழல்கொள) பற்றி
யெரியவும். நனிமுனிபவர் - மிகவும் கோபிப்பவர். பதி வீழிமிழலை.
தொழுவு இலா- தொழுதல் இல்லாத (நிசிசரர்.)