3716. பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர்
       பலியெனா
எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு
     மியல்பினர்
அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ
     வாரமா
வெங்கண வரவின ருறைதரு பதிவிழி
     மிழலையே.                         5

     5. பொ-ரை: பசிய கண்களையும், சிறு முழக்கத்தையுமுடைய
பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக்
கொண்டவர். எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர்.
தேவர்களால் தொழப்படும் தன்மையர். தேவர்கள் தொழுது எழும்
இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர்.
கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பைங்கண்ணது - பசிய கண்ணை யுடையதாகிய.
மழலை - சிறுமுழக்கத்தைச் செய்கின்ற. பெரு வெள் ஏற்றினர்.
வெள்ளிய பெரிய இடபத்தையுடையவர். தருமம் - எவற்றினும்
பெரியதாகலின் பெரு ஏறு எனப்பட்டது. "பெரிய விடைமேல்
வருவார் அவரெம்பெருமா னடிகளே" என வந்தமையும் காண்க. பலி
எனா - பிச்சை(இடுமின்) என்று, எங்கணும் - எல்லா இடங்களிலும்,
எக்கண்ணும் என்றதன் மெலித்தல் விகாரம். உழிதர்வர் - திரிபவர்.
தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய தொண்டர்களும், அந்தத்
தேவர்களும் தொழுது எழ (உறைபதி) - "தொழப்படுந் தேவர்தம்மாற்
றொழுவிக்கும் தன் தொண்டரையே" (தி.4 ப.112. பா.5) என்ற
திருவிருத்தக்கருத்து.