3719. |
பாதமொர்
விரலுற மலையடர் பலதலை |
|
நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழு
புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை
மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி
மிழலையே. 8 |
8.
பொ-ரை: தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி, கயிலை
மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி
செய்தவர். பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய
திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர்.
ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய
விடத்தைத் தேக்கிய கண்டத்தர். அச்சிவபெருமான் வீற்றிருந் தருளும் பதியாவது, வேதம்
ஓதுதலுடன், தமக்குரிய ஆறு தொழில்களையும்
செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பாதம் ஓர் விரல் உற - பாதத்தில் உள்ள ஓர் விரல்
பொருந்த அதனால், மலை அடர் - பலதலைநெரிபட மலையால்
அடர்க்கப்பட்ட பத்துத் தலைகளம் (அரைபடச் செய்து) என ஒரு
சொல் வருவித்துரைக்க. புனைகழல் - புனைந்த கழலையுடைய.
திருவடி - வினைத் தொகைப் புறத்து அன்மொழி. ஓதமொடு ஒலி -
ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற, திரைபடு - அலைகளையுடைய. கடல்
விடம் உடை(ய), மிடறினர் - கழுத்தையுடையவர். வேதமொடு -
வேதம் ஓதுதலுடன். உறுதொழில் - தமக்குற்றதாகிய ஆறு
தொழில்களையும் உடைய. மதியவர் - அறிஞர்களாகிய அந்தணர்.
வாழும்பதி - திருவீழிமிழலை. ஒன்று அல்லாதன பல என்பது தமிழ்
வழக்காதலால் பத்தென்னாது பல என்றார்.
|