3721. இச்சைய ரினிதென இடுபலி படுதலை
 

     மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென
     வுணர்விலர்
 மொச்சைய வமணரு முடைபடு துகிலரு
     மழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி
     மிழலையே.                         10

     10. பொ-ரை: பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற
பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின்
பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும்,
புத்தர்களும் ஆவர். நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய
சமணர்களும், துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய திருச்சிற்றம்பலம் ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும்
அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: இடுபலி இனிது என இச்சையினராய், மகிழ்வது (ஓர்)
பிச்சையர் - மகிழ்ந்தேற்கும் பிச்சையுணவுடையவர். ஓர் அசைநிலை
“மார்கழி நீர் ஆடேலோ ரெம்பாவாய்” (தி.8 திருவெம்பாவை. பா.20.)
“அஞ்சுவ தோரும் அறனே” என்புழி (குறள் 366) வந்தமைபோல.
அத்தகைய பிச்சையினரெனினும், (அவர்) பெருமையை. இறை - ஒரு
சிறிதும். பொழுது - எப்பொழுதும். அறிவு என - (நம்மால்) அறிதல்
(முடியும்) என்று. உணர்வு இலர் - (எவராலும்) உணரப்படாதவர்.
மொச்சைய - (நீராடாமையால்): துர்நாற்றத்தையுடைய, அமணரும்,
முடைபடுதுகிலினர் (ஒலித்துடுத்தாமையால்) முடை நாற்றத்தையுடைய
ஆடையைப் போர்ப்பவராகிய புத்தரும். அழிவது ஓர் விச்சையர் -
அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவர். விச்சையர் என்பதற்கு
“குழலன் கோட்டன் குறம்பல்லியத்தன் என்பதற்கு நச்சினார்க்கினியர்
உரைத்தாங்கு (திருமுருகாற்றுப் படை) உரைக்க.