3722. உன்னிய வருமறை யொலியினை முறைமிகு
       பாடல்செய்
இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி
     மிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன
     வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி
     பெறுவரே.                          11

     11. பொ-ரை: இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும்
அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும்
அந்தணர்கள் வசிக்கின்றதும், அழகிய சோலைகள் விளங்குவதுமான
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி, நிலைபெற்ற
புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய
இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர்.
மறுமையில் வீடுபேறடைவர்.

     கு-ரை: உன்னிய - (இறைவன் மொழியென்று) கருதப்பட்ட
அருமறை யொலியினை, உதாத்தம், அநுதாத்தம், சுவரிதம் என்னும்
ஒலியை முறைமைமிக்க பாடல்களாகப்பாடுகின்ற, இனிய
இசையையுடைய அந்தணர் வாழும் என்பது. முறை... ... உறை -
என்பதன் பொருள். இம்மையில் வரும் துயர் எதுவும் இல்லாதவராய்,
மறுமையில் முத்தியுலகெய்துவரென்பது இறுதிப்பகுதியின் பொருள்.