3724. புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர்
       புரிவினர்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர்
     வாய்மையர்
இனமுடை மணியினொ டரசிலை யொளிபெற
     மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகடம் வளநகர்
     சேறையே.                          2

     2. பொ-ரை: வணங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத்
தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும், மன உறுதிப்பாட்டுடன்
அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர்
களைந்து அருள்புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில்
கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க
கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய்
வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: புனம் உடை - வனங்களிலுள்ள. (பல நறுமலர் கொடு)
தொழுவது ஓர் புரிவினர் - வணங்கும் விருப்பம் உடையவர்கள்.
மனம் உடை - உறுதிப்பாட்டையுடைய (அடியவர் படு(ம்) துயர்)
களைபவர் - ஒழிப்பவர், “உள்ளம் உடைமை உடைமை
பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும்” (குறள். 592) என்பதில்
உள்ளம் - ஊக்கத்தைக் குறித்ததுபோல. இங்கு மனம் -
உறுதிப்பாட்டைக் குறித்தது. “வானம் துளங்கிலென் மண்கம்ப
மாகிலென்...ஊனமொன் றில்லா வொருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே”
(தி.4. ப.112. பா.8.) என்றதுங் காண்க. வாய்மையர் -
நியமத்தையுடையவர். இனம் உடை - கூட்டமான. மணி -
கழுத்திற்கட்டும்மணி. அரசு இலை - அரசிலை போன்ற ஓர் அணி.
இதுவும் விடையின் கழுத்திற் கட்டுவது. ஒளிபெற - ஒளியையயுடையதாக. மிளிர்வது (ஓர்) - பிரகாசிப்பதாகிய. சினம்
முதிர் - கோபம் மிக்க. (விடை).