3725. புரிதரு சடையினர் புலியத ளரையினர்
       பொடிபுல்கும்
எரிதரு முருவின ரிடபம தேறவ
     ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர
     மனைதொறும்
திரிதரு சரிதைய ருறைதரு வளநகர்
     சேறையே.                           3

     3. பொ-ரை: சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர். புலியின் தோலை அரையில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற
சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும்
உருவினர். இடப வாகனத்தில் ஏறுபவர். சரிந்த வரிகளையுடைய
வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி
வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர். அத்தகைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: புரிதரு - முறுக்குண்ட. சடையினர். பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் - நீறுபுத்த நெருப்புப்போலும் வடிவையுடையவர்.
திருமேனிக்கு - நெருப்பு உவமை. இடபம் (அது) ஏறுவர். ஈடு உலாம்
- இடப்பட்டதாகிச் சரிகின்ற. வரிதரு - கீற்றுக்களையுடைய.
வளையினர் அவரவர் - வளையலை அணிந்தவர்களாகிய அவ்வம்
மாதர்கள். (மகிழ்தர மனைதொறும்) திரிதரு சரிதையர் - திரியும்
இயல்பு உடையவர். உலாம்வளை - ‘தொடியுலாம் மென்கை
மடமாதர்’. (நால்வர் நான்மணி மாலை. பா.3.)