3726. துடிபடு மிடையுடை மடவர லுடனொரு
 

     பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை
     யரவினர்
 பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு
     மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர்
     சேறையே.                         4

     4. பொ-ரை: உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா
தேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர்.
இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக்
கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித்தோலாடை அணிந்தவர்.
செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: துடிபடும் இடை உடை - உடுக்கைபோலும்
இடையையுடைய (படும் - உவமவாசகம்) மடவரல் உமை -
பெண்ணாகிய உமாதேவியார். இடிபடு - இடிபோலும். (குரல் உடை
விடையினர்.) பொடி - திருநீறு. பொலிதரு - விளங்குகின்ற. செடிபடு
- செடிகளைப் போல் அடர்த்தியான, சடைமுடி அடிகள்..