3729. பாடின ரருமறை முறைமுறை பொருளென
       வருநடம்
ஆடின ருலகிடை யலர்கொடு மடியவர்
     துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு
     மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழி றழுவிய
     சேறையே.                          7

     7. பொ-ரை: இறைவன் முறைப்படி வரிசையாக அரிய
வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றும் திரு
நடனம் செய்பவர். உலகில் அடியவர்கள் மலரும், பூசைக்குரிய பிற
பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர்.
வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று
மகிழ்பவர். அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர்,
அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: முறைமுறை அருமறை பாடினர் - முறைமைப்படி
வரிசையாக அரியவேதம் பாடினர். (முதல் முறை - பாடும் கிரமம்.
அடுத்தமுறை - இதன்பின் இது பாடுக என்னும் வரிசை) பொருள்
என அருநடம் ஆடினர் - (ஐந்தொழில் இயற்றும் கடவுள் தாமே
என்னும்) தன்மையை யுணர்த்துபவராய் அரிய திருக்கூத்தாடியவர்.
பொருள் - கடவுள், திருக்கூத்தில் ஐந்தொழிலும் காட்டும் குறி:-
“தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பிற்சாற்றியிடும்
அங்கியிலே சங்காரம் - ஊற்றமா, ஊன்று மலர்ப்பதத்தே
யுற்றதிரோதம் முத்தி, நான்றமலர்ப்பதத்தே நாடு”. (உண்மை விளக்கம்-36.) உலகிடை - உலகில். (மலரும், பூசைக்குரிய பிற
பொருளும் கொண்டு) அடியவர் (பூசித்துத்) துதி செய்ய. மலர்கொடும்
- மலரும் கொடு எனப் பிரித்துக் கூட்டுக. மலரும் - எச்சவும்மை.
வாடினர் - வாட்ட முற்றவனாகிய பிரமனின். படுதலை - வறண்ட
மண்டையோட்டில். தலை கொய்யப்பட்டதனால் வாட்டம் உற்றனன்
என்க. வாடினர் - என்றது இழிப்புப்பற்றி.