3732. |
துகடுறு
விரிதுகி லுடையவ ரமணெனும் |
|
வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில
வினவிடல்
முகிடரு மிளமதி யரவொடு மழகுற
முதுநதி
திகடரு சடைமுடி யடிகடம் வளநகர்
சேறையே. 10 |
10. பொ-ரை:
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக்
கொள்ளும் புத்தர்களும், தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள்
என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும்,
குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை.
எனவே அவற்றைக் கேளற்க. அரும்பையொத்த இளம்பிறைச்
சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த
சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வள
நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
துகள்துறு - அழுக்கு மிகுந்த. விரிந்த ஆடையை
உடையாக உடுத்துக் கொள்வோராகிய புத்தரும், அமண் என்னும்
வடிவினர் - தோற்றத்தாலேயே இவர்கள் அமணரென்று கண்டு
கொள்ளத்தக்க வடிவம் உடையவர் - (சமணர்) விகடம் (அது) உறு -
குறும்புத்தனமான. சிறு மொழியவை - அற்ப வார்த்தைகள். நலம்
இல - நற்பயன் இல்லாதவை (ஆதலால்) வினவிடல் - கேளற்க.
முகிழ்தரும் இளம்மதி - அரும்பையொத்த பிறைச் சந்திரனை. அரவு
ஒடும், அழகு உற, முதுநதி - பழமையான - கங்காநதி. திகழ்தரு -
விளங்குகின்ற. சடைமுடி அடிகள் தம் வள(ம்) நகர் - சேறையே -
முகிழ் + தரு = முகிடரு. திகழ் + தரு = திகடரு. இவ்வாறு
புணர்வதற்கு விதி வீரசோழியத்துக் காண்க.
|