3733. கற்றநன் மறைபயி லடியவ ரடிதொழு
 

    கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர்
     சேறைமேல்
  
 குற்றமில் புகலியு ளிகலறு ஞானசம்
     பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர்
     தீருமே.                           11

     11. பொ-ரை: நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று
ஓதும் அடியவர்கள், தன்னுடைய திருவடிகளைத் தொழ, அழகிய
குறுகிய இடையுடைய உமாதேவியோடு, சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக்,
குற்றமற்ற புகலியில் அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத
ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு
ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும்.

     கு-ரை: கவின் - அழகு. உறு - பொருந்திய. சிறு இடையவள்
- உமாதேவியார், புகலியுள். இகல் அறு - எவரொடும்
பகைமையில்லாத, ஞானசம்பந்தன். சொல் - பாடல்களை. சொல் -
சினை ஆகுபெயர். தகவு உற - முறையோடு, மொழிபவர், அழிவு
இலர் எனவே அவரைப்பற்றிய துயரும் அழிவின்றி நிற்கும் என்னற்க.
அவை பற்றற நீங்கும் என்பதாம். ‘தீர்தல் - விடற்பொருட்டாகும்’.
(தொல், சொல், உரியியல். 22)