3738. பண்ணியன் மலைமகள் கதிர்விடு
 

     பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை  
     யிணையொடு கலவலின்

 நண்ணிய குளிர்புனல் புகுதுநள்
     ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.               5

     5. பொ-ரை: பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற
இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த, அழகான கலசம்
போன்ற இருமுலைகளையும் கூடும், குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும்
திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம்
எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும்
அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.

    கு-ரை: பண் இயல் - (உலகிற்கு) பண்பாட்டை அமைவித்த.
மலைமகள். பண் - கடைககுறை. இயல் மலைமகள் - வினைத்
தொகை. இயல் என்ற சொல்லின் பிறவினை விகுதி குன்றியது.
மலைமகள் - உமாதேவியாரின். கதிர் விடு - ஒளி வீசுகின்ற. பரு -
பருத்த. மணி - இரத்தினங்கள் பதித்த. அணி -
ஆபரணத்தையணிந்த. நிறம் - மார்பிலே உள்ள. கண் இயல் -
அழகு பொருந்திய. நண்ணிய குளிர் - குளிர்ச்சியையுடைய. புனல்
புகுதும் - நீர்பாயும், நள்ளாறர். விண் இயல் - ஆகாயம் வரைதாவும்.