3747. |
அங்கதி
ரொளியின ரரையிடை மிளிர்வதொ |
|
ரரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி
மார்பினர்
சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு
சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில்
விளமரே. 3 |
3.
பொ-ரை: சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப்
பொலிவுடையவர். இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர்.
செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர். அக்கதிர்போல் ஒளிவீசும்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள
மார்பினர். சங்குகள் ஒலிக்க, பறை, குழல், முழவு போன்ற
வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர். வெண்ணிற
ஒளிவீசும் மழுப்படையை உடையவர். இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அம்கதிர் ஒளியினர் - அழகிய ஒளிவீசும்
பொலிவையுடையவர். மிளிர்வது - ஒளிர்வது. செங்கதிர் என நிறம் -
சூரியன் நிறத்தையொத்த நிறமும். அணையது ஓர் செழுமணி
மார்பினர் - அச்சூரியனை ஒத்த ஒப்பற்ற செழிய பதுமராகம் முதலிய
இரத்தினங்களால் இழைத்த
ஆபரணங்களை அணிந்த மார்பும்
உடையவர். சங்கு - சங்கும். அதிர் - ஒலிக்கும். பறை, குழல்,
முழவினோடு - இவ்வாத்தியங்களோடு, இசைவதோர் சரிதையர் -
இசைவதாகிய திருக்கூத்தையுடையவர். (சரிதை - இங்கு நடனத்தைக்
குறித்து நின்றது.) வெம் - கொடிய. கதிர் - ஒளியை உடைய. மழு
உடையவர் இடமெனில் - அது விளமர்.
|