3751.
|
நெறிகமழ்
தருமுரை யுணர்வினர் |
|
புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல
பயில்பவர்
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய
சடைமிசை
வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில்
விளமரே. 7
|
7. பொ-ரை:
சிவபெருமான் சரியை முதலிய நான்கு
நெறிகளாலும், ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு
நல்கியவர். தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை
இடப்பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர். திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர்.
புள்ளிகளையுடைய படமெடுத்தாடும்
பாம்பை அணிந்தவர். கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு இவை கலந்த
சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள்
அடையப் பெற்றவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
நெறி - சரியை முதலிய நான்கு மார்க்கங்களும்.
கமழ்தரும் - விளங்குகின்ற. உரை - ஆகமங்களால். உணர்வினர் -
உலகிற்கு உணர்வுகொளுத்தியவர். என்றது மயர்வறநந்தி
முனிகணத்தளித்தமையை நெறி கமழ் தரும் உரை - உணர்வினர் -
சைவ நன்னெறியிற் படரும் (அடியார்களின்) உரையிலும், உணர்விலும் இருப்பவர் எனலும்
ஆம். இங்கு, கமழ்தரும் உரை என்பதை
திருவாய்ப்பொலியச் சிவாயநமவென்று (தி.4.ப.94.பா.6)
போற்கொள்க.புணர்வு உறும் மடவரல் - (ஞானத்தில்) சிவமாகிய
தம்மின் வேறாகாது ஒன்றிய சத்தியாகிய அம்பிகை. (உருவத்தும்)
செறிகமழ்தரும் - (இடப்பாகத்தில்) பொருந்தி விளங்கும் உரு
உடையவர், வடிவையுடையவர். படை பல பயில்பவர் - பல
ஆயுதங்களையும் பயில்பவர்போற் கொள்பவர். பொறி - புள்ளிகள்.
கமழ்தரு - பொருந்திய பட அரவினர். விரவிய - கலந்த. வெறி -
வாசனை. கமழ்தரு - வீசும். மலர் - அடியர் புனைந்த மலர்.
அடைபவர் - அடையப் பெற்றவர். முதல் இரண்டாம் அடிகளில்
கமழ் தரும் என்பது - விளங்கும் என்ற பொருளிலும், மூன்றாம்
அடியில் பொருந்திய என்ற பொருளிலும் வந்தது.
|