3755. வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள்
       விகிர்தரைச்
சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை
     செழுவிய
அந்தணர் புகலியு ளழகம ரருமறை
     ஞானசம்
பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை
     பறையுமே.                         11

     11. பொ-ரை: பசுவின் சாணம் வெந்ததாலான
திருவெண்நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை (விகிர்தர்),
சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற
செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல
ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்
பதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.

     கு-ரை: விகிர்தர் - (பிறரின்) வேறுபட்டவர். சிந்தையுள்
இடைபெறு (இடை - இடம்) என்றது:- “உளம் பெருங்களன்
செய்ததும் இலை நெஞ்சே” என்ற திருவாசகத்தின் (தி.8) கருத்து.
செழுவிய - செழுமை பொருந்திய (புகலி). அருவினை. பறையும் -
நீங்கும்.