3763. அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா
       மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிர லூன்றினா
     ருறைவிட மொளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமு முத்தமுந்
     தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண்
     கொச்சையே பேணுநெஞ்சே.           8

     8. பொ-ரை: நெஞ்சமே! வலிமை வாய்ந்த பற்களையுடைய
அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப்
பெயர்த்தெடுக்க, ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும்
நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற, ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற
இதழ்களையுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற
செந்நிறப் பூக்களும், முத்துக்களைப் போன்ற அரும்புகளும்,
அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின்
பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு
வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ
போற்றி வழிபடுவாயாக!

     கு-ரை: அடல் எயிற்று - வலிய பற்களையுடைய. அரக்கனார்
- இராவணன். (இகழ்ச்சிக் குறிப்பு) வாய்கள். உடல் கெட -
உடலோடு நொறுங்க திருவிரல் ஊன்றினான். வெள்ளி மடல் இடை
- வெள்ளியைப் போன்ற மடல்களையுடைய விரிந்த பூக்களின்
இடையிடையே. பவளமும் - பவளம் போன்ற பழம் பூக்களும்.
முத்தமும் - முத்துப்போன்ற அரும்புகளும் உடைய. கொத்து -
பூங்கொத்துக்களையுடைய. புன்னைமாடு - புன்னை மரங்களில். குருகு இனம் - பறவையினம், பெடையோடும். பெருகும் - மகிழ்ச்சி மிகும்
(கொச்சை).