3764. அரவினிற் றுயிறரு மரியுநற்
       பிரமனு மன்றயர்ந்து
குரைகழ றிருமுடி யளவிட
     வரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகண்
     மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார்
     கொச்சையே கருதுநெஞ்சே.            9

     9. பொ-ரை: நெஞ்சமே! பாம்புப் படுக்கையில் துயிலும்
திருமாலும், நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி, ஒலிக்கின்ற
வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், திருமுடியையும்
அளவிடுதற்கு அரியவராய், பூக்களிலுள்ள மகரந்தமானது
செம்பொன்துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில்,
மலைமகளான உமாதேவியார் மகிழும்படி, கரிய, அழகிய கழுத்தினை
யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்
கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும்
தியானிப்பாயாக!

     கு-ரை: அரவினில் துயில்தரும் - பாம்பு அணையில் தூங்கும்.
அரியும், நல் பிரமனும். அயர்ந்து - சோர்வுற்று, குரைகழல் -
ஒலிக்கின்ற வீரகண்டையையணிந்த திருவடியையும், (திருமுடி
அளவிட அரியவர்). கொங்கு - மகரந்தம், செம்பொன் - செவ்விய
பொன்னைப் போல. விரி - மலர்களில் விரியப்பெற்ற. பொழில் -
சோலை. இடைமிகு - இடையிடையே மிக்குள்ள. மலைமகள்
மகிழும்படி கடவுளார் வீற்றிருக்கின்ற கொச்சையையே கருதுங்கள்.