3775. |
கரைகட
லரவணைக் கடவுளுந் |
|
தாமரை
நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி
யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம்
புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 9 |
9. பொ-ரை:
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில்
துயில்கொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்,
ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை, செருக்கழிந்து
தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான்.
அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும்
இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும்
திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
கரைகடல் அரவு அணைக்கடவுளும் - ஒலிக்கின்ற
கடலில் பாம்பை அணையாகவுடைய திருமாலும், நிறம் - இங்கு
வடிவு என்னும் பொருளில் வந்தது இலக்கணை. கூர் எரி -
மிக்கநெருப்பு. குரைகழல் அடி - ஒலிக்கும் வீர தண்டையையுடைய.
அடி தொழ - (தமது செருக்கு ஒழிந்து தாழ்வுற்றுத்) தொழுமாறு,
(நிறங்கொண்டபிரான்) தொழ - காரியப்பொருட்டு வினையெச்சம்,
வரைகெழுமகள் - இமவானிற் பிறந்த மகள்.
|