3778.

கோங்கமே குரவமே கொழுமலர்ப்             

   புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
     திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
     ரிடமென விரும்பினாரே.     
         1

     1.பொ-ரை: கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும்
புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி
ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள
குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது
இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப்
பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை -
முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை
அடித்துக்கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள
குரங்காடுதுறையைச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார்
என்க.