3780. முத்துமா மணியொடு முழைவள
       ராரமு முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
     சடைமுடி யடிகடம்மேல்
சித்தமா மடியவர் சிவகதி
     பெறுவது திண்ணமன்றே.              3

     3. பொ-ரை: முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும்
சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில்
உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்,
பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து
உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால்
வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி.

     கு-ரை: முழைவளர் - குகைகளின் அருகிலே வளர்ந்த.
ஆரமும் - சந்தனமரங்களையும். முகந்து - வாரி. நுந்தி எத்தும் -
தள்ளிமோதும் காவிரி. மாமத்த மலர் - பெருமை பொருந்திய
பொன்னூமத்த மலரொடு. அடிகள் தம்மேல் - அடிகளிடத்து.
சித்தமாம் அடியவர் - சித்தம் வைக்கும் அடியவர்.