3783. கோலமா மலரொடு தூபமுஞ்
       சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
     திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
     நினையவல் வினைகள்வீடே.            6

     6. பொ-ரை: அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான
குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைத்து
போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.

     கு-ரை: வாலியார் வழிபடப் பொருந்தினார்:- தலப்பெயர்க்
காரணங் கூறியவாறு. அடுத்த பாட்டிலும் இக்குறிப்பு
விளக்கப்படுகிறது. ஆலும் - அசைந்து வருகிற, காவிரி. வல்வினைகள்
- எளிதில் நீங்காத கன்மங்கள். வீடு - விடுதலையாம். வீடு -
முதனிலை திரிந்த தொழிற் பெயர்.