3792. ஏனைவெண் கொம்பொடு மெழில்திகழ்
       மத்தமு மிளவரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
     கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந் தாடுவர்
     பாடுவ ரருமறைகள்
தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி
     யுறைசெல்வர் தாமே.                 5

     5. பொ-ரை: தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள்
நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும்
அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன், அழகிய
ஊமத்த மலரையும், இளம் பாம்பையும், வளைந்த வெண்ணிறப்
பிறைச்சந்திரனையும், அணிந்த சடைமுடி உடையவர். கொல்லும்
தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். கொல்லும்
தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். பசுவிலிருந்து
பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய
பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர். அரிய வேதங்களை
அருளியவர்.

     கு-ரை: ஏனம் - பன்றி, எழில் திகழ் - அழகு விளங்குகின்ற,
மத்தம் - பொன்னூமத்தை, கூன், நல், வெண்பிறை, ஆவின் -
பசுவிற்கிடைப்பதாகிய. நல் - நல்ல. ஐந்து - பஞ்சகவ்வியத்தை,
உகந்து ஆடுவார், அரு மறைகள் பாடுவார், திருநெல்வேலியுறை
செல்வர்தாம், நல் - தூயன ஆகிய, “ஆடினாய் நறுநெய்யொடு
பால்தயிர்” (ப.1.பா.1.) என்புழியும் காண்க.