3795. முந்திமா விலங்கலன் றெடுத்தவன்
       முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர
     லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள்
     பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                8

     8. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற, பூக்களைக்
கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில்
வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்ந்தெடுத்த இராவணனின்
தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற
திருவடியின் ஒரு விரல் நகநுனியை ஊன்றி வருத்தினார். அவரை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: மாவிலங்கல் - பெருமையையுடைய, கயிலை மலையை,
அன்று - முந்தி. எடுத்தவன் முடிகளோடு தோள்நெரிய. உந்தி -
அமிழ்த்தி. ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார். கந்தம்
ஆர்தரு - வாசனை நிறைந்த சோலைகளில் குரங்குகள் பாய்வதால்
மலர்களிலுள்ள தேன்துளிகள் சிந்து பூந்துறையின்கண் மணக்கின்ற
திருநெல்வேலி. குறிப்பு: இங்குச் சிந்துபூந்துறையைக் குறித்தது
போலவே இப்பதிகம் முதற்பாடலில் பொருந்துதண் - என்பது
கண்ணுதல் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க தொகையெனக்
கொண்டு தண் பொருந்தம் எனத் தாமிரபரணி நதியைக்
குறிப்பித்தனர் எனலும் ஆம்.