3796. பைங்கண்வா ளரவணை யவனொடு
       பனிமல ரோனுங்காணா
தங்கணா வருளென வவரவர்
     முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
     வரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                 9

     9. பொ-ரை: பசுமையான, வாள்போன்ற ஒளிபொருந்திய
கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில்
பள்ளிகொள்ளும் திருமாலுடன், குளிர்ந்த தாமரைப்பூவில்
வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற் பொருளான இறைவனைக்
காணமுடியாமல், அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக
என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம்
விளங்கும் சிவபெருமானே, அந்தணர்கள் ஒன்றுகூடி நால்
வேதங்களைப் பாடவும், பெண்கள் நடனமாடவும், மாத விழாக்களும்,
நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும்
அருட்செல்வராவார். அவரை வழிபடுவீர்களாக.

     கு-ரை: பைங்கண்வாள் அரவு - பசிய கண்களையும்
ஒளியையும் உடைய அரவு; அணையான் காணா - (அடியையும்
முடியையும்) காணாமல். அங்கணா - சிவபெருமானே. அங்கணன் -
சிவபெருமானுக்கு ஒருபெயர். திங்கள் விழா - நாள் விழா. மல்கு -
மாதோற்சவங்களும், நித்தியோற்சவங்களும் பொருந்திய
திருநெல்வேலி. கூட்டம் ஆகிய அந்தணர் வேதங்கள் பாடிவரவும்,
பெண்கள் நாட்டியம் ஆடவும் நடக்கும் திருவிழாக்கள்.
நான்மறையவர் - நால்வேதங்களையும் பாடி வருபவர்.