3799. பாடியுளார் விடையினர் பாய்புலித்
       தோலினர் பாவநாசர்
பொடிகொண்மா மேனியர் பூதமார்
      படையினர் பூணநூலர்
கடிகொண்மா மலரிடு மடியினர்
      பிடிநடை மங்கையோடும்
அடிகளா ரருள்புரிந் திருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                1

     1. பொ-ரை: சிவபெருமான் உலகில் பொருந்திய இடப
வாகனம் உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக
அணிந்துள்ளவர். மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர்.
திருவெண்ணீறணிந்த திருமேனியர். பூதங்களாகிய படைகளை
உடையவர். முப்புரி நூலணிந்த மார்பினர். பூசிக்கும் அடியவர்களால்
நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர்.
அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய
உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும்
இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: படியுள் ஆர் - பூமியிற் பொருந்திய, (விடை). பூதம்
ஆர் படையினர் - பூதங்களாகிய நிறைந்த சேனைகளையுடையவர்.
பூண் அம்நூலர்- பூணநூலர். கடிகொள் - வாசனையையுடைய. மலர்
இடும் அடியினர் - (பூசிக்கும் அடியவர்) மலர்களை இடுகின்ற
அடியையுடையவர். பிடி - பெண்யானை. மங்கையோடும்
அன்பர்களுக்கு அருள்புரிந்து இருக்கும் இடமாவது அம்பர்மாகாளம்.