3800. கையின்மா மழுவினர் கடுவிட
       முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம
     ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர்
     தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.               2

     2. பொ-ரை: சிவபெருமான் கையில் பெருமையான
மழுப்படையை உடையவர். கொடிய விடமுண்டதால் கரிய
கண்டத்தை உடையவர். சிவந்த திருமேனியர். ஊன்பொருந்திய
உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர்.
உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது
போற்ற நடனமாடும் தலைவர். அப்பெருமான் உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: கொடிய விடத்தையுண்டதனால் எய்திய கறுப்பு
அமைந்த கழுத்தை உடையவர். ஊன் அமர் - ஊன் பொருந்திய.
உடைதலை - உடைந்த மண்டையோட்டில். பலிதிரிவார் -
பிச்சையேற்பதற்குத் திரிபவர். வையம் ஆர் பொதுவினில் -
உலகமனைத்தினுக்கும் உரியதான சிற்சபையில்; நடம் அது ஆடும்
ஐயன்.