3803. புறத்தின ரகத்துளர் போற்றிநின்
       றழுதெழு மன்பர்சிந்தைத்
திறத்தின ரறிவிலாச் செதுமதித்
     தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக்
     காலின்கீ ழருள்புரிந்த
அறத்தின ரரிவையோ டிருப்பிட
     மம்பர்மா காளந்தானே.                5

     5. பொ-ரை: இறைவர் உள்ளும், புறமும் நிறைந்தவர். உள்ளம்
உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில்
விளங்குபவர். அறிவில்லாத, அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த
தக்கனின் வேள்வியை அழித்தவர். சனகர், சனந்தரர், சனாதரர்,
சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து
அறமுரைத்து அருள்புரிந்தவர். அப்பெருமான் உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: புறத்தினர் அகத்துளர் - உள்ளும் புறமும் நிறைந்தவர்.
(அன்பர் சிந்தையின் வண்ணம் வருபவர்.) செதுமதி - அழிதற்
கேதுவாகிய புத்தி. செற்ற - அழித்த.