3808. சாக்கியக் கயவர்வன் றலைபறிக்
       கையரும் பொய்யினானூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
     யாதலில் வழிபடுவீர்
வீக்கிய வரவுடைக் கச்சையா
     னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய வரனுறை யம்பர்மா
     காளமே யடை மினீரே.                10

     10. பொ-ரை: புத்தர்களாகிய கீழ்மக்களும், தலைமயிர்
பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும், இறைவனை
உணராது, பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை. அவற்றைக் கேட்கவேண்டா. பாம்பைக் கச்சாக
அணிந்தவனும், தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு
அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக!

     கு-ரை: சாக்கியக்கயவர்கள் - புத்தர்களாகிய கீழ்மக்களும்,
(தலைமயிர் பறித்தலையுடைய) கையர் - வஞ்சகர்களும்,
(பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள) மொழியவை -
உபதேசங்கள். பிழையவை - குற்றமுடையவை, (ஆதலால் அவற்றை
மெய்யென வழிபடுவீர்களாகிய நீங்கள் அவ்வழிபடுதலினின்று விலகி,
அம்பர் மாகாளமேயடைமின்). வீக்கிய அரவுடைக்கச்சையான் -
பாம்பைக் கச்சாகக் கட்டியவன், இச்சையானவர்கட்கு எல்லாம் -
தன்னிடத்து விருப்பமுடையவர்களுக்கு எல்லாம். ஆக்கிய - அருளை வைத்த (அரன்,) தலை (பறி) - முதலிற் கூறும் சினையறி கிளவி.
மொழியவை - அவை பகுதிப்பொருள் விகுதி, பிழைய - பலவின்
பால் வினைமுற்று. வை - விகுதி மேல்விகுதி
வருவித்துரைக்கப்பட்டது.