3820. எண்டிசைக் கும்புகழி ன்னம்பர் மேவிய
  வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.             1

     1.பொ-ரை: எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு
இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே!
வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை
வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று
மேம்படுவரே.

     கு-ரை: எண்டிசைக்கும் - எட்டுத்திக்குக்களிலும், புகழ்
இன்னம்பர் - புகழைப் பரப்பிய திரு இன்னம்பர், திசைக்கும் -
உருபு மயக்கம். (வண்டு) இசைக்கும் - இசைபாடும், இசைக்கும் பெயர் அடியாகப் பிறந்த பெயரெச்சம், நூல் செய்யலுற்றேன் என்ற
பொருளில் “நூற்கலுற்றேன்” (கம்ப. அவையடக்கம். 2) என்று கம்பர்
கூறியதுபோல். வண்டிசைக்கும் சடையீர் என்றது மலர் மாலையணிந்த
சடையீர் என்ற படி. உ(ம்)மை வாழ்த்துவார், (அரிபிரமனாதியருக்குத்)
தொண்டு இசைக்கும் - இன்னது செய்க என ஏவல் இடும்.
தொழிலோர் - பதவியை உடையவராவர். தொண்டு - அடிமை.
தொழில் - பதவியென்னும் பொருளில் காரணம் காரியமாக
உபசரிக்கப்பட்டது “தொழப்படும் தேவர் தம்மாற் றொழுவிக்கும்
தன் தொண்டரையே” என்ற திருவிருத்தத் (தி.4.ப.112.பா5.) தின்
கருத்தும் இங்கே ஒப்பிடத் தக்கது.