3823. இடிகுர லிசைமுர லின்னம்பர் மேவிய
  கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே.                   4

     4. பொ-ரை: இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு
போன்ற வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும்
சடைமுடி உடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடை
முடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம்
பெற்றவராவர்.

     கு-ரை: இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம்
முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும். “முழவதிர மழையென்றஞ்சிச் சில
மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே”
(தி.1.ப.130.பா.1.)என முன்னும் வந்தமை காண்க. கடி கமழ் - வாசனை
வீசும்; சடைமுடி.