3824. இமையவர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
  உமையொரு கூறுடை யீரே.
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே.                   5

     5. பொ-ரை: உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற்
கொண்டவரே, தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில்
எழுந்தருள்பவரே, உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து
ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார்.

     கு-ரை: இமையவர் - தேவர், கண்ணிமையாதவர், இன்னம்பர்
மேவிய உடையீர் என்க. உ(ம்)மை நினைப்போர், பேரன்பு
படைத்தவர் ஆவர். அன்பு அமைகிலர் - அன்பு அமைய
மாட்டாதவர்.ஆகார் எனவே அன்பு அமையப்பெற்றவர் ஆவர்
என்றதாம். இரண்டு எதிர் மறை ஓர் உடம்பாட்டை வலியுறுத்திற்று.