3826. எழிறிக ழும்பொழி லின்னம்பர் மேவிய
  நிழறிகழ் மேனியி னீரே
நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.                 7

     7. பொ-ரை: அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திரு
இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும்
திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய
கொடுவினை கெட்டழியும்.

     கு-ரை: எழில் திகழ் பொழில் - அழகால் விளங்கும் சோலை.
பசுமை நிறத்தாலும், பல நிற அரும்பு பூ, காய்கனி இவற்றின்
தோற்றத்தாலும் எய்தும் அழகு. நிழல்திகழ் - ஒளியால் விளங்கும்
மேனியினீர், உமை நினைபவர் குழறிய இப்பொருட்டு ஆதலை,
“கடுஅடுத்த நீர்கொடுவா காடிதாவென்று நடுநடுத்து நாநடுங்கா
முன்னம் - பொடியடுத்த பாழ்கோட்டம் சேராமுன் பன்மாடத்
தென்குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட” எனும் பதினொன்றாந்
திருமுறையாலறிக.