3836. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
  பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.               6

     6. பொ-ரை: நெற்றிக்கண்ணை உடையவரும்,
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை
போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய
சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா
தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த
அறிஞர்களின் கடமையாகும்.

     கு-ரை: பெற்றி கொள் - அடியவர்க்கருள்வதையே
தன்மையாகக் கொண்ட. பிறைநுதலீர் - பிறைபோன்ற
நெற்றியையுடைய உமையம்மையாரை. உரையீர், பிறைநுதல் -
அன்மொழித்தொகை. பேணுதல் - பாராட்டி நிட்டை கூடுதல்,
கற்றறிவோர்கள் தம் கடன் - ஞான நூல்களைக் கற்றறிந்த
அறிஞர்கள் கடமையாகும். கல்வியறிவிற்குப் பயன் கூறியவாறு.