3840. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
  சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே.                10

     10. பொ-ரை: வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும்,
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும்,
புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு
புத்தமும், சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது
புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும்.

     கு-ரை: நீக்கிய - வறுமை, பிணி முதலியவற்றை நீக்கிய, புனல்
அணி - நீர் வளம் உடைய. நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் -
சாக்கியரோடு கூடிய சமண். உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது,
பாக்கியம் உடையவர் பண்பு - “தவமும் தவ முடையார்க்காகும்,”
(குறல். 262) “சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது”
(சித்தியார். சுபக்கம் சூ.2.91) என்ற கருத்து.