3482. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
  படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.                  1

       1. பொ-ரை: வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய
திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு
படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள்
சிவலோகம் அடைவர்.

     கு-ரை: திடம் மலி - வலிமைமிக்க. மதிள் - மதில். ல, ள
ஒற்றுமை. படம் மலி - படத்தையுடைய, உம்மைப் பணிபவர்
அடைவது, அமர் உலகு அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய
சிவலோகமாம். உரையிலடங்காப் பெருமையது ஆகலின் அது என்று
சுட்டளவோடு நிறுத்தப்பட்டது.