3860. விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
  இலங்கைமன் னிடர்கெடுத் தீரே
இலங்கைமன் னிடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.              8

     8. பொ-ர: மலைபோன்ற உறுதியான மதிலையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவரும், அன்று இலங்கை மன்னனான இராவணனைக்
கயிலையின் கீழ் அடர்த்தபோது, அவன் உம்மைப் போற்றிச்
சாமகானம் பாட அவன் துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய
சிவபெருமானே! அவ்வாறு இலங்கை மன்னனின் துன்பத்தைப்
போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை அடக்கி
ஆளும் வல்லமையுடையவர்.

     கு-ரை: விலங்கல் - மலைபோன்ற. ஒள் மதில் - அழகிய
மதில். இடர் கெடுத்தீரே - செருக்கால் அவன் உற்ற துன்பத்தைப்
போக்குதற்கு இரங்கி இடரை அகற்றியருளினீர். வாசனாமலம் தம்மறிவினும் மிக்குப் புலன்களையீர்த்துச் செல்லுமாகலின்,
திருவைந்தெழுத்தால் உம்மைத் துதிப்போர், புலன்களைக் கோபித்து
மடக்குவதும் உறுதி. ஏனையோர்க்கு ஆகாது என்பதாம்.