3861. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
  அற்புத னயனறி யானே
அற்புத னயனறி யாவகைநின்றவ
நற்பத மறிவது நயமே.                      9

     9. பொ-ரை: மலைபோன்ற மாளிகைகளும், சோலைகளு
முடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றவரும், திருமாலும், பிரமனும் அறியாவண்ணம்
நின்றவருமான சிவபெருமானே! அவ்வாறு திருமாலும், பிரமனும்
அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது
நினைப்பதே மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும்.

     கு-ரை: வெற்பு - உவமை ஆகுபெயர். அது “குன்றொன்றொ
டொன்று” (தி.2.ப.88.பா.4) என்னும் தென்திருமுல்லைவாயிற்
பதிகத்தால் அறிக. அமர் - பொருந்திய, சோலை சூழ்ந்த, மிழலை,
(அற்புதன்) அல் - ஐந்து இராத்திரியில். புதன் - ஞானங்களை
வெளிப்படுத்தின திருமால், புதன் - வடசொல். அந்த மதத்துக்குப்
பாஞ்சராத்திரம் “அஞ்சலினவர் புகழ் அண்ணல்” என்பது.
மகாஸ்காந்தம் என்னும் பெயர் வழங்கும். இனி அற்புதன் என்பதற்கு,
கண்ணிடந்து பூசித்த அரிய செயலையுடையவன் எனலும் ஆம்.
அற்புதனோடு அயனும் அறியாதவனானான். ஒருவினையொடுச்
சொல் நின்றது. நின்றவரே! உமது நல்ல திருவடியை அறிவது -
உணர்ந்து ஆர்வம் தழைப்பதுவே. நயம் மானிடப் பிறவியெய்தினோர் அடையும் பயனாம். நின்ற அந் நற்பதம் என்க.