3862. வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
  புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.                 10

     10. பொ-ரை: நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள்
வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றவரும், புத்தமும், சமணமும் வீழுமாறு
செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு புத்தமும், சமணமும்
வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய
நன்மனம் உடையவர்கள்.

     கு-ரை: பத்திசெய் மனம் உடையோரே உம்மைப்
போற்றத்தக்கவர் என்றது ஈற்றடியின் கருத்து. ஏனையோர் உம்மால்
நக்கு நிற்கப்படுவோர் ஆவர் என்பது குறிப்பு. “பொக்கமிக்கவர் பூவு
நீரும் கண்டு நக்கு நிறபர் அவர்தமை நாணியே” (தி.5ப.90.பா.9.)