3865. மொய்குழ லாளொட முதுகுன்ற மேவிய
  பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறு நலமே.                  2

     2. பொ-ரை: அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள
சிவபெருமானே! பாம்பைக் காச்சாகக் கட்டியுள்ள உம்மை பாடுவார்
எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே
மிகப்பெறுவர்.

     கு-ரை: மொய்குழலாள் - அடர்ந்த கூந்தலையுடைய
அம்பிகையோடு முதுகுன்றில் மேவிய அசைத்தருளினீர் என்க.
அசைத்தல் - கட்டுதல். பை - பாம்பு. உம்மைப்பாடுவார் நாடோறும்
நன்மைகள் குறைவின்றி மிகப்பெறுவர். நைவு - குறைதல்.