3877. குண்டிகை பீலி தட்டோடு நின்று
       கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி
     யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தெ
     னெழில்கவந் தாரிடமாம்
தொண்டிசை பாட லறாத தொன்மைத்
     தோணி புரந்தானே.                   10

     10.பொ-ரை:கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகிய
வற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும்
உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற
வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப
வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத
பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை:குண்டிகை; நினைத்த இடத்தில் நீர் பருகற்கு. பீலி;
வழியில் சிற்றுயிர்க்கும் தீங்கு நேராவாறு கூட்டிக்கொண்டு
நடப்பதற்கு.தட்டு - தடுக்கு. உட்காருவதற்கு உபயோகிப்பர். நின்று
கோசரங் கொள்ளியர் சமணர். கோசரம் - கோ என்னும் பல
பொருளொரு சொல். நீரைக் குறித்தது. சரம் - அந்நீரில்
வாழ்வனவாகிய மீன்களைக் குறித்து. மண்டை - ஒருவகை உண்
கலம். மனம் கொள் - விருப்பமாக கஞ்சி ஊணர் புத்தர். வாய்மடிய
- பேச்சு அடங்க. வாய் - கருவியாகுபெயர். தொண்டு - தொண்டர்;
சொல்லால் அஃறிணை. பொருளால் உயர்திணை. வாக்கு மனங்கட்கு
அகோசரத்தை அறியார் என்பதே கருத்துத.