3882. மாதன நேரிழை யேர்தடங்கண்
       மலையான் மகள்பாடந்
தேதெரி யங்கையி லேந்தியாடுத்
     திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து
     மிராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும்
     புனிதர் செயுஞ்செயலே.                4

     4.பொ-ரை:குற்றமற்ற அடியவர்கள் தொழுது போற்றத் திரு
இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அரும்பு போன்ற இள வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், கொன்றை
மலரையும் சூடியுள்ள புனிதரான சிவபெருமான், பெரிய
கொங்கைகளையுடையவளாய், ஒளிபொருந்திய ஆபரணங்களை
அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான்மகளான உமாதேவி
பாட, ஒளிபொருந்திய நெருப்பை உள்ளங்கையிலேந்தி நடனமாடும்
செயலின் திறத்தைத் தெரிந்துணர்வார் சிவஞானிகளாவர்.

     கு-ரை:மாதனம் - பெரிய தனங்கள், நேர் இழை - நேரிய
ஆபரணங்கள். தே(ய)து - ஒளியையுடையதாகிய, எரி - நெருப்பை.
தேயு அது, தேயது: (அது பகுதிப் பொருள் விகுதி) தேது என மருவி
வந்தது. போது - அரும்பு போன்ற வெண்திங்கள் "முகிழ்
வெண்டிங்கள் வளைத்தானை" என்ற திருவாலவாய்த் திருத்
தாண்டகத்தால் உணர்க. வினை முடிவு இரண்டாம் பாடலிற்
போற்கொள்க. தேசெரியுமாம்.