3883. சூலமோ டொண்மழு நின்றிலங்கச்
        சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடவாடுங்
     குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடு
     மிராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள்
     நிமலர் செயுஞ்செயலே.                5

     5.பொ-ரை:ஏலம் முதலிய செடிகளையுடைய நறுமணம்
கமழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்
தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய,
இயல்பாகவே பாவங்களின் நீங்கியவரான எங்கள் சிவபெருமான்,
சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை
இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி அருகில் நின்று பாட,
நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர் சிவஞானிகளாவர்.

     கு-ரை:நின்று - கையில் தங்கி, நல்மாது - உமாதேவியார்,
பாட ஆடும், குணம் - தன்மை, ஏல(ம்)நறும் பொழில் - ஏலம்
முதலிய செடிகளையுடைய நறும் மணம் கமழும் பொழில்.