3887. |
கோவல
னான்முக னோக்கொணாத |
|
குழக
னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு
மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து
மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம்
மிறைவர் செயுஞ்செயலே. 9 |
9.பொ-ரை:அம்பு
எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து
ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி
வீற்றிருந்தருகின்ற, இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய
சிவபெருமான், திருமால், பிரமன் இவர்களால் அறியப்படாதவர்.
இளமையும், அழகும் அமைந்த திருவுருவினர். ஒளி பொருந்திய
நெருப்பைத் தம் கையிலேந்தி ஆடுகின்ற, தேவர்கட்கெல்லாம்
இறைவனான அப்பெருமானின் அருட்செயலின் மெய்ம்மையை
அறிவோர் சிவஞானிகளாவர்.
கு-ரை:நோக்கொ(ண்)ணாத
- நோக்க ஒண்ணாத. குழகன் -
இளமையையுடையவன். மேவலன் - அனைவராலும் விரும்பப்படு பவன்.
மேவுதல் - விரும்புதல். ஏவலன் - அம்பு எய்தலில் வல்லவன்
ஆகிய இராமன்; இறைவனைப் புகழ்ந்து ஏத்தி வாழ்த்திய
தன்மையால், ஏவலனார் - உயர் சொற்கிளவியாற் குறித்தார். சே -
இடபமாகிய. வ(ல்)ல - வல்ல. வெல் கொடி - வெல்லும் கொடியை,
ஏந்து கொள்கை.
|