3889. தேவியை வவ்விய தென்னிலங்கை
       யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு
     மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தனல்ல
     மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை
     யாயின பற்றறுமே.                    11

     11.பொ-ரை: சீதாதேவியைக் கவர்ந்த தென்னிலங்கை
மன்னனான இராவணனின் வலிமையை அழித்து, அம்பு எய்யும்
வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமமேச்சுரம் என்னும்
திருத்தலத்தில், விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை,
நாவலராகிய ஞானசம்பந்தர், நல்ல மொழியால் போற்றிப் பாடிய
பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை, ஓதி வழிபட
வல்லவர்களின் வினைகள், முற்றிலும் அழியும்.

     கு-ரை: தேவி - சீதை. திறல் வாட்டி - வலிமையை யழித்து.
ஏ இயல் - அம்பு எய்யும். வெஞ்சிலை - கொடிய வில்லை யேந்திய.
அண்ணல் - வீரனாகிய இராமன். நண்ணும் - போற்றிய. வெஞ்சிலை
- "காய்சினவேல்" திருக்கோவையாரிற் போலக் கொள்க. நல்ல
மொழி - பயன்தரும் சொற்களாகிய. பா இயல் - பாட்டின்
இலக்கணம் வாய்ந்த மாலை. வினை பற்று அறும் - வினை முற்றும்
அழியும்.