3902. கோத்தகல் லாடையுங் கோவணமுங்
       கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத்
     திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த
     கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர்
     வலம்புர நன்னகரே.                     2

     2. பொ-ரை: சிவபெருமான் காவியுடையும், கோவணமும்
அணிந்தவர். ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை
ஏந்தி வாசிப்பவர். மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர்.
எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி, காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில்
வீற்றிருந்தவர். அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், முத்தீ
வளர்த்து, நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள்
வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.

     கு-ரை: கோத்த:- அணிந்த என்னும் பொருளில்வந்தது. காவி
தோய்த்த உடையும், கோவணமும், ஒரு கையிற் கோடுகொட்டி
என்னும் வாத்தியமும் கொண்டு. அநங்கனை - மன்மதனை. தேசு
அழித்து - ஒளியுடலைப் போக்கி. தேய்த்து - அழித்து. தேசு -
ஆகுபெயர். மறையோர்(வாழும்) வலம்புரம்.