| 
         
          | 3903. |  நொய்யதொர் 
              மான்மறி கைவிரலின்
           |   
          |  | னுனைமே 
            னிலையாக்கி மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி
 விரிபுன் சடைதாழபப
 மையிருஞ் சோலை மணங்கமழ
 இருந்தா ரிடம்போலும்
 வைகலு மாமுழ வம்மதிரும்
 வலம்புர நன்னகரே.                    3
 |  
             3.பொ-ரை: 
        இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து, நெருப்புப்
 போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி, விரிந்த
 சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
 நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப் போல் முழவதிரச்
 சிறப்புடன் நடக்கும், இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம்
 கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
       கு-ரை: 
        நொய்யது - இலேசான உடம்பை யுடையதாகிய மான்கன்று. மானின் உடம்பு நொய்ய தென்றும் அதனாலேயே அது
 ஏனையவற்றிலும் வேகமாக ஓடக்கூடியதென்றும் வாயு பகவானின்
 வாகனமாக அதனைக் கூறுவது அதனாலே யென்றும் கூறுப. நுனை
 - நுனி. நிலை ஆக்கி - நிலையாக நிற்கச் செய்து. மெய் எரி மேனி
 - உடம்பின் தீப்போன்ற மேனியில் வெண்ணீறுபூசி (மேனி -
 உடம்பின் தோற்றப் பொலிவு ). தாழ - தொங்க. மை - இருளடர்ந்த.
 இரு - பெரிய சோலை (மணம்) கமழ - (இருந்தார்) காரண காரியப்
 பொருளின்றி வந்தது. அது "வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச்
 செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே" 
        (தி.1.ப.129.பா.1.) வைகலும் - நாடோறும்
 மாமுழவம் அதிரும் என்றது, நித்திய பூசையே திருவிழாப்போற்
 சிறப்பிற நடக்கும் என்ற குறிப்பு.
 |