3909. |
தாருறு
தாமரை மேலயனுந் |
|
தரணி யளந்தானும்
தேர்வறி யாவகை யாலிகலித்
திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யானிமிர்ந்த
பெருமா னிடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும்
வலம்புர நன்னகரே. 9 |
9.
பொ-ரை: மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல்
வீற்றிருக்கும் பிரமனும், உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும்
உண்மையை உணரமுடியாது, தம்முள் யார் பெரியவர் என்று
மாறுபாடு கொண்டு, முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது
திகைத்துத் திரிந்து, பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க, அசைக்க
முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நீண்ட சோலைகளையுடைய
நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
கு-ரை:
தார் உறு - தனக்கு மாலையாகப் பொருந்திய. தாமரை
மேல் - தாமரை மலர்மேல் தங்கும். அயனும் - பிரமனும்
பிரமனுக்குத் தாமரை மலரே மாலை; தாமரை மலரே இருக்கை.
இகலி - தம்முள் மாறுபட்டு. தேர்வு - அடி முடி தெரிதலை. அறியா
வகையால் - அறியாத தன்மையினால் திகைத்துத்திரிந்து. ஏத்த -
துதிக்குமாறு, பேர்வு அறியாவகையால் நிமிர்ந்த, அசைக்க முடியாத
தன்மையோடு ஓங்கிய பெருமான். வார் உறு - நெடிய சோலை. வார்
- நெடுமை என்னும் பொருளில் வந்த உரிச்சொல். "வார்தல், போகல்,
ஒழுகல், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள்" (தொல்காப்பியம்.
சொல். உரியியல். 21.)
|