3910. காவிய நற்றுவ ராடையினார்
       கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்
     பழந்தொண்ட ருள்ளுருக
ஆவியு ணின்றருள் செய்யவல்ல
     வழக ரிடம்போலும்
வாவியி னீர்வயல் வாய்ப்புடைய
     வலம்புர நன்னகரே.                  10

     10. பொ-ரை: காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில்
தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும், கடுமையான
நோன்புகளை மேற்கோள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும்
சொற்களைச் திருச்சிற்றம்பலம் சிறிதும் கேளாத, வழிவழியாகச்
சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த,
அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர்
சிவபெருமான் ஆவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம்
என்னும் நன்னகர் ஆகும்.

     கு-ரை: காவிய கல்துவர் ஆடையினார் - காவியைத்
தருவதாகிய நல்ல துவரில் தோய்த்த ஆடையையுடைய புத்தர்களும்,
கடுநோன்பு மேல்கொள் பாவிகள் - இரண்டு உவாவும் அட்டமியும்
பட்டினி நோன்பையே மேலாகக்கொண்ட பாவிகளாகிய சமணர்களும்
(சிந்தாமணி. 1547) சொல்லும் சொல்லைப் பயின்று அறியா - கேளாத.
பழந் தொண்டர் - வழிவழித் தொண்டர்கள். ஆவியுள் நின்று -
அவர்கள் ஆன்மாவினுள் நின்று, அருள் செய்ய வல்ல அழகர்.
வாவியில் - குளங்களிலும். வயல் - வயல்களிலும் நீர் வாய்ப்பு
உடைய வலம்புரம்.