3915. வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி
       விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந்
     துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங்
     கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்
     பரிதிந் நியமமே.                     4

     4. பொ-ரை: சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற
சுடுகாட்டில் நடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடை தொங்க
அனைவரும் உறங்குகின்ற இரவிலும், மாலையிலும், நண்பகலிலும்,
பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர். அழகிய வண்டுகள்
ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம்
முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: வெம் சுரம் - கொடிய பாலைவனம் போன்ற சுடு
காட்டில். சேர் - அடைவதாகிய. ஓர் ஆடல் - திருவிளையாடலை.
பேணி - மேற்கொண்டு. இருண் மாலை - பின்மாலையாகிய
இரவிலும் நடுப்பகலிலும். துணையார் - பூதங்கள் முதலிய துணையுடையவ ராய்ப், பலி தேர்ந்து. அம் - அழகிய. சுரம்பு ஆர்
- வண்டுகள் ஒலிக்கும். குழல் சோர - கூந்தல் சரிய; கூந்தல் சரிதல்,
வளை நெகிழ்தல் முதலியன காதல் கொண்டவர் மெய்ப்பாடுகள்.
உள்ளம் - என் உள்ளத்தை, வண்டுகள் பஞ்சுரம் முதலிய பண்களை
வண்டுகள் யாழிசை போல முரன்று பாடும். பாடி முரலும் என்பதன்
விகுதி பிரித்து மாறிக் கூட்டுக.